மக்களின் கலைதான் நமது பொக்கிஷம் நெய்தல் கலை விழாவில் கனிமொழி எம்.பி பேச்சு.!
தமிழர்களின் பண்பாடு, கலாசாரம், கலை, நாகரிகம் போன்றவற்றை பறைசாற்றும் வகையிலான கலை, கலாச்சார நிகழ்ச்சிகள், மற்றும் உணவுத் திருவிழா ஆகியவை 'நெய்தல் கலைவிழா’ என்ற பெயரில்
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், ஸ்பிக் நிறுவனமும் இணைந்து திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழியின் முன்னெடுப்பில் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் நெய்தல் கலை விழா நடைபெறுகிறது.
நேற்று தொடங்கிய நெய்தல் கலை நிகழ்ச்சியானது ஜூலை 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் ஆரம்பமான கலை விழாவில் ஏராளமான பார்வையாளர்கள், பொதுமக்கள், கல்லூரி மாணவ மாணவிகள், என பலர் கலந்து கொண்டனர். அப்போது கல்லூரி மாணவிகள் எம்.பியுடன் செல்ஃபி எடுத்து கொண்டனர்.
தூத்துக்குடி மாணவர்களின் பறையிசையோடு இந்த கலைவிழா களை கட்டியது. தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி தலைமையில் தொடங்கிய விழாவில், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி, பாலாஜி சரவணன், ஸ்பிக் முழு நேர இயக்குனர் எஸ்.ஆர். ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வரவேற்புரையாற்றினார். அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நெய்தல் கலை விழாவை பற்றி சிறப்புரையாற்றினர்
தொடர்ந்து நெய்தல் கலை விழாவில் தலைமை உரையை நிகழ்த்திய கனிமொழி எம்.பி
"ஒவ்வொரு நாளும் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காக எங்களோடு உறுதுணையாக இருக்கும் அமைச்சர் கீதாஜீவனுக்கும், மேயர் ஜெகன் பெரியசாமிக்கும் என் நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்துள்ள கலைஞர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நெய்தல் விழா சிறப்பாக நடைபெற வேண்டும் என்று அண்ணன் முதல்வர் தளபதி அவர்கள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் அவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நெய்தல் விழா தூத்துக்குடியில் ஏன் நடத்தப்பட வேண்டும் என்று கேட்கிறார்கள். ஏன் உங்களுக்கு இவ்வளவு ஆர்வம் என்று கேட்கிறார்கள்.
மண் சார்ந்த கலை வடிவங்கள், மக்களின் கலை வடிவங்கள் நம் வாழ்வின் பொக்கிஷம். இவை நம் வாழ்வை வரித்துக் கொள்கிறது. வேறு கலை வடிவங்கள் மதம் சார்ந்த, இறை சார்ந்தவற்றை பிரதிபலிக்கும் சூழலிலே இந்த நாட்டுப்புற கலை வடிவங்கள்தான் நம் வாழ்வை பிரதிபலிக்கின்றன.
புதிதாக நம் நாட்டுக்கு ரயில் வந்தபோது, ஸ்விட்ச் போட்டால் மெஷின் ஓடும் தொழிற்சாலைகள் வந்தபோது இந்த ஒவ்வொரு அனுபவத்தையும் நம்முடைய கிராமிய பாடல்கள்தான் பதிவு செய்தன.
வெள்ளம், வறட்சி, வெளியூர் போய் வேலை செய்ய வேண்டிய நிலை, மீனவர்களின் வாழ்க்கை, நம் வாழ்வின் சின்னச் சின்ன கனவுகள் என அத்தனையும் பதிவு செய்வது மண் சார்ந்த கலைகள்தான்.
இந்த கலைகளில்தான் கேள்விகள் இருக்கின்றன. நம்முடைய சமூகத்தின் மீதான கேள்விகளை முன் வைக்கின்றன கானா பாடல்கள். தொடர்ந்து நம்முடைய வாழ்க்கையுடன் பயணிக்கும் மண் சார்ந்த கலை வடிவங்கள், அடுத்த தலைமுறையை நோக்கியும் பயணிக்கின்றன.
அடுத்த தலைமுறைக்கான பாடல்களும் வந்து கொண்டிருக்கின்றன. நம்முடைய கேள்விகளை, நம் அரசியலை முன் வைக்கும் கலை வடிவங்கள் இவை. இவற்றை நம் அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாக கொண்டு சேர்க்க வேண்டும் என்பதால்தான் தலைவர் கலைஞர் இதை தன் ஆட்சியில் நடத்திட ஊக்கப்படுத்தினார்.
தளபதி அவர்களும் இப்போது வாழ்த்து தெரிவித்திருக்கிறார். நம் பண்பாட்டில் உணவும் சேர்ந்ததுதான். கலைகளும், உணவும்தான் நம் வாழ்வின் பண்பாட்டுக் கூறுகள். அதை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி” என்று பேசினார்
நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசி ரவிக்குமார் மார்க்கண்டேயன் சண்முகையா மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், ஸ்பிக் நிறுவனத்தின் முழு நேர இயக்குனர் ராமகிருஷ்ணன், மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் கண்ணபிரான், துணை மேயர் ஜெனிட்ட செல்வராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர்.