உணவகங்களில் ‘சவர்மா’ தயாரிப்பில் பாதுகாப்பு நடைமுறை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சமீபத்தில் கேரளாவில் உள்ள ஒரு உணவகத்தில் ‘சவர்மா’ சாப்பிட்டு ஒரு மாணவி இறந்து உள்ளார். அது போன்ற ஒரு நிகழ்வு தமிழகத்தில் நிகழாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சவர்மா தயாரித்து விற்பனை செய்யும் உணவகங்களை ஆய்வு செய்ய, உணவு பாதுகாப்புத் துறையின் ஆணையர் செந்தில்குமார், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் அறிவுறுத்தி உள்ளனர்.
அதன் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் டாக்டர் மாரியப்பன் தலைமையில், தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்களான, சக்திமுருகன், காளிமுத்து, ஜோதிபாசு, சிவக்குமார் மற்றும் மாரியப்பன் ஆகியோர் சவர்மா தயாரித்து விற்பனை செய்யும் சுமார் 20-க்கும் மேற்பட்ட உணவகங்களை ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது, கோவில்பட்டியில் உள்ள 2 உணவகங்களில் சுகாதாரமற்ற வகையில் வைக்கப்பட்டு இருந்த சுமார் 10 கிலோ சிக்கன் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும், 2 உணவகங்கள் உணவு பாதுகாப்பு உரிமம் இன்றி இயங்கியதால், அவற்றின் இயக்கம், உரிமம் பெறும் வரை நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் சவர்மா தயாரிப்பாளர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றிருக்க வேண்டும், உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றவரிடத்தில் மட்டும் தான் சிக்கன் போன்ற மூல உணவுப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். சிக்கனை மசாலாவுடன் கலக்கும் பொழுது, கையுறை அணிந்திருக்க வேண்டும்.சவர்மா தயார் செய்யும் பணியாளரும் ஏனைய பணியாளர்களும் டைபாய்டு போன்ற உணவு சம்பந்தப்பட்ட தொற்றுநோய்களுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தி, மருத்துவரிடம் இருந்து தொற்றுநோய் தாக்கமற்றவர் என்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். சவர்மா அடுப்பானது, தூசிகள் படியுமாறு சாலையோரத்திலோ அல்லது உணவகத்தின் வெளியிலோ வைத்தல் கூடாது.
பாதுகாப்பான இடத்தில் தான் வைக்க வேண்டும். சவர்மா நன்கு வேக வைத்த பின்னர்தான் நுகர்வோர்களுக்கு வழங்க வேண்டும். சவர்மா அடுப்பு தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். அடுப்பினை அணைத்து அணைத்து பயன்படுத்தக்கூடாது. அடுப்பில் வைத்து வெந்த 2 மணி நேரத்திற்குள், சவர்மாவை பரிமாறிவிட வேண்டும். அதுவரை அடுப்பு மிதமான வெப்பநிலையில் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். மீதம் ஏதும் இருப்பின், அதனை பரிமாறாமல் கழிவாக அகற்றிவிட வேண்டும்.. சவர்மாவை குறைந்தபட்சம் 70 டிகிரி செல்சியசில் வேக வைக்க வேண்டும்.சமைப்பவரின் கைகள் படாமல் தான் சவர்மா ரோல் தயாரித்து நுகர்வோர்களுக்கு வழங்க வேண்டும்.
மாவட்டத்தில் யாரேனும் இந்த விதிமுறைகளை பின்பற்றாமல் சவர்மா தயாரித்து விற்பனை செய்தால், அவர்களது கடை எந்த வித முன்னறிவிப்பும் இன்றி மூடப்படும். பொதுமக்கள், குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சவர்மா வாங்குவதற்கு முன்னர், அவை சுகாதாரமானதாக தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து வாங்கி உண்ண வேண்டும். சவர்மா தாயரிப்பில் ஏதேனும் சுகாதாரக் குறைபாடுகளைக் கண்டறிய நேரிட்டால், 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.