ராஜஸ்தான்: கிணற்றில் 2 கர்ப்பிணிப் பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பிணமாக மீட்பு - வரதட்சணை கொடுமையால் கிணற்றில் தள்ளி கொலை செய்த மாமியார்.! - போலீஸ் விசாரணை.!

 

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மாவட்டத்தின் டூடு நகரில் உள்ள கிணற்றில் இருந்து மூன்று பெண்களின் உடல்கள், (அவர்களில் இருவர் கர்ப்பிணிகள்) மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட 5 உடல்கள் மீட்கப்பட்டன. உடன்பிறந்த சகோதரிகளான 3 பெண்களின் மாமியார் வரதட்சணை கேட்டு அவர்களை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட பெண்கள், உடன்பிறந்தவர்கள், கலுதேவி, மம்தா மற்றும் கமலேஷ் என அடையாளம் காணப்பட்டனர். இரண்டு குழந்தைகள் - ஒரு வயது மற்றொன்று வெறும் 27 நாட்கள் மட்டுமே ஆன கலு தேவியின் குழந்தைகள் என தெரிய வந்துள்ளது.

அவர்களது வீடுகளில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் அவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்ட கிணறு உள்ளது. வரதட்சணை கேட்டு மாமியார் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

ஐந்து பேரும் புதன்கிழமை காணாமல் போனதாக புகார் கூறப்பட்ட போதிலும், சனிக்கிழமை வரை அவர்களைத் தேடும் முயற்சியில் காவல்துறை ஈடுபடவில்லை என உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்தன. மாமியாரால் தாக்கப்பட்ட 15 நாட்களுக்குப் பிறகு கலு தேவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக உள்ளூர்வாசி ஒருவர் கூறினார். அவர் கண்ணில் காயம் அடைந்து மருத்துவமனையில் இருந்து திரும்பி வந்தார் என அவர் கூறினார்.