தமிழகம், புதுச்சேரியில் 12- ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று காலை தொடங்குகிறது. இந்த தேர்வை 8 லட்சத்து 37 ஆயிரம் மாணவ மாணவியர் எழுதுகின்றனர். இவர்களில் பள்ளி மாணவர்கள் மட்டும் 8 லட்சத்து 22 ஆயிரத்து 684 பேர். மாணவர்கள் 398371, மாணவியர் 468996 பேர். புதுச்சேரியில் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 14627. அவர்களில் மாணவர்கள் 6972, மாணவியர் 7655 பேர். இவர்கள் தவிர தனித் தேர்வர்கள் 28353 பேர் எழுதுகின்றனர். அவர்களில் 3ம் பாலினத்தவர் 6 பேர் அடங்குவர். பிளஸ் 2 தேர்வில் மாற்றுத் திறனாளிகள் 3638 பேர் பங்கேற்கின்றனர். சிறைவாசிகள் 73 பேர் எழுதுகின்றனர்.
தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடியும். தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக விடைத்தாள் முகப்பில் குறிப்புகள் எழுதவும், கேள்வித்தாள் படித்துப் பார்க்கவும் 15 நிமிடங்கள் ஒதுக்கப்படுகிறது. தமிழகத்தில் 3081 தேர்வு மையங்களும், புதுச்சேரியில் 38 , தனித் தேர்வர்களுக்கு 134, சிறைவாசிகளுக்காக 9 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களாக 44 ஆயிரத்து 985 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 3050 பறக்கும் படையினர், நிலையான படை உறுப்பினர்கள் 1241 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிளஸ் 2 தேர்வில் அறிவியல் பாடத் தொகுதியின் கீழ் 5 லட்சத்து 3 ஆயிரத்து 745 மாணவ மாணவியரும், வணிகவியல் பாடத் தொகுதியில் கீழ் 2 லட்சத்து 70 ஆயிரத்து 799 பேரும், கலைப் பாடத் தொகுதியின் கீழ் 14 ஆயிரத்து 885 பேரும் தொழிற்கல்வி பாடத் தொகுதியின் கீழ் 47 ஆயிரத்து 882 பேரும் எழுதுகின்றனர்.
சென்னையில் 167 மையங்களில் 46 ஆயிரத்து 785 மாணவ மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். சிறைவாசிகளுக்காக வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, புதுக்கோட்டை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 3638 மாற்றுத் திறனாளி மாணவ மாணவியர் பங்கேற்கின்றனர். தேர்வுகளுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்வுகளில் குழப்பம், குளறுபடிகள் நடக்காமல் இருக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர தேர்வுமையங்களை பார்வையிட 4291 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத வரும் மாணவர்கள் தேர்வு மைய வளாகத்துக்குள் செல்போன் எடுத்து வர தடை செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்களும் செல்போன் வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகள் தெடர்பாக மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் தங்களது புகார்களையும், கருத்துகளையும் தெரிவிக்க அரசுத் தேர்வு இயக்ககத்தில் முழு நேர தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படுகிறது. இந்த அறை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். அவற்றை தொடர்பு கொள்ள 9498383081, 9498383075 என்ற எண்களை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.