தூத்துக்குடி மாநகராட்சியின் 60 வார்டு உறுப்பினர்களும் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். ஆணையர் சாருஸ்ரீ உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில் 44 வார்டுகளில் திமுக வேட்பாளர்களும், காங்கிரஸ் 03 வார்டுகளிலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் 02 வார்டிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு வார்டிலும் வெற்றி பெற்றது. அதிமுக 6 வார்டுகளிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 4 வார்டிலும் வெற்றி பெற்றிருந்தனர்.
நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் படி, 11 ஆண்டுகளுக்கு பிறகு தூத்துக்குடி மாநகராட்சியை திமுக, தனி மெஜாரிட்டியுடன் கைப்பற்றியுள்ளது. மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் 50 இடங்களை பிடித்தது சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மாநகராட்சி தேர்தல் களத்தில் திமுக 47 இடங்களில் போட்டியிட்டு 44 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதுபோல் காங்கிரஸ் 7 இடங்களில் போட்டியிட்டு 3 இடங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும், முஸ்லிம் லீக் 1 இடத்திலும் வெற்றி பெற்றது.
அதிமுக 60 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. இந்த தேர்தலால் எதிர்பாராத வகையில் சுயேட்சைகள் 4 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி, திருச்செந்தூர், காயல்பட்டினம் நகராட்சிகள், 17 பேரூராட்சிகளில் உள்ள 396 வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் கடந்த 19-ம் தேதி நடந்தது.
இதில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இன்று அந்தந்த உள்ளாட்சி அலுவலகங்களில் பதவியேற்றனர். இதன்படி தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இன்று மாமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். உறுப்பினர்களுக்கு ஆணையர் சாருஸ்ரீ பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
விழாவில் அமைச்சர் கீதாஜீவனின் சகோதரர் ஜெகன் பெரியசாமி, முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா உட்பட 60 உறுப்பினர்களும் ஒருவர் பின் ஒருவராக பதவியேற்றனர்.
திமுக கவுன்சிலர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்பி, முன்னாள் மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி ஆகியோரின் பெயரை முன்மொழிந்து பதவியேற்றனர். அதிமுக உறுப்பினர்கள் ஜெயலலிதா, ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரின் பெயர்களை முன்மொழிந்தனர்.
விழாவில் அமைச்சர் கீதாஜீவன், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் மீராசா, மீனவர் அணி அமைப்பாளர் ராபர்ட், ஜீவன் ஜேக்கப் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.