தூத்துக்குடி முனியசாமிபுரம் சுடலை காலனி பகுதியைச் சேர்ந்த மாடசாமி மகன் மாரி சசிகுமார் (35) என்பவர் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரிடம் விருதுநகர் மாவட்டம் சிவகாசி மருதுபாண்டியர் மேட்டுத்தெருவைச் சேர்ந்த
கோவிந்தராஜ் மகன் ரமேஷ்குமார் (36) என்பவர், தான் சென்னையில் நிருபராக இருப்பதாகவும், அங்கு தெரிந்தவர்கள் நிறைய பேர் இருப்பதாகவும், தன்னால் அரசு வேலை வாங்கி கொடுக்க முடியும் என்றும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.
இதனை நம்பி மாரி சசிகுமார் தனக்கும், தனது மனைவி மற்றும் சகோதரிக்கும் அரசு வேலை வாங்கி தர ரூபாய் 10,00,000/-மும், அதே போல் மாரி சசிகுமாரின் உறவினர்களான முத்துராஜ் என்பவரிடம் ரூபாய் 3,25,000/-மும், முத்துச்சாமி என்பவரிடம் ரூபாய் 3,00,000/-மும், திருஞானம் என்பவரிடம் ரூபாய் 3,10,000/-மும்,
துரை முருகன் என்பவரிடம் ரூபாய் 3,25,000/-மும், அமுதமலர் என்பவரிடம் ரூபாய் 3,00,000/-மும் ஆக மொத்தம் ரூபாய் 25,60,000/- பணம் வாங்கி ஏமாற்றியுள்ளார்.
இதுகுறித்து மாரி சசிகுமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் ரமேஷ்குமார் நிருபர் என்று கூறி மோசடி செய்தது தெரிய வந்ததையடுத்து, சிவகாசி திருத்தங்கல் ரயில்வேஸ்டேஷன் அருகே தனிப்படையினர் ரமேஷ்குமாரை இன்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ரமேஷ்குமார் என்பவர் மீது விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கிலும், 2 திருட்டு வழக்குகளிலும், சிவகாசி டவுன் காவல் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகளிலும் மொத்தம் 6 வழக்குகளிலும் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவரைக் கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.
வேலை தேடும் இளைஞர்கள் அனைவரும் தாங்கள் படித்த படிப்பின் மீதும், தங்கள் திறமையின் மீதும் நம்பிக்கை வைத்து போட்டித்தேர்வுகள் எழுதி வெற்றி பெற்று அரசு வேலை வாங்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
இது போன்று அரசு வேலை வாங்குவதற்கு பணம் கொடுத்து யாரும் ஏமாற வேண்டாம் என மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.