2 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்: உள்ளாடையில் வைத்து எடுத்து வந்தவர் சிக்கினார்

கொழும்பு, மலேசியா, துபாயில் இருந்து வந்த கடத்தி வந்த ரூ. 85 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ தங்கம் பறிமுதல்  


சென்னை விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது.


இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். அப்போது கொழும்பில் இருந்து வந்த  விமானத்தில் பயணம் செய்த இலங்கையை சேர்ந்த ஆகாஷ்காந்த்(23) என்பவரை சோதனை செய்தபோது உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ. 35 லட்சம் மதிப்புள்ள 824 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.


 கொழும்பில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த முகமது இப்ராகீம்(58) என்பவரை சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர்.


அப்போது உடமையில் வைத்திருந்த குடையில் தங்க கத்திகளை கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இவரிடம் இருந்து ரூ. 11 லட்சத்தி 37 ஆயிரம் மதிப்புள்ள 268 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.


அதுப்போல் அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த சவுக்கத் அலி(32) என்பவரிடம் இருந்து ரூ. 18 லட்சம் மதிப்புள்ள 426 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள். 


மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த ஜம்மா கான்(49), ரகீம்(48) ஆகியோரிடம் இருந்து ரூ. 21 லட்சம் மதிப்புள்ள 503 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள். 


ஒரே நாளில் நடத்திய சோதனையில் 5 பேரிடம் இருந்து ரூ. 85 லட்சத்தி 37 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 21 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இலங்கை வாலிபர் ஆகாஷ்காந்த் கைது செய்யப்பட்டார். மற்றவர்களிடம் யாருக்காக கடத்தி வந்தனர். இதன் பின்னணியில் யார் உள்ளனர் என சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.


Previous Post Next Post